புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் தைப் பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர், ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடக்கநிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 100 மாடுகளும் 50 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள், துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை மாடு பிடி வீரர்கள் மல்லுக்கட்டி பிடித்தனர்.