புதுக்கேட்டை:தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்து பாரம்பரிய முறையில் மீண்டும் டோக்கன்களை விழா கமிட்டியினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்து மனு அளித்தனர்.
இதனையடுத்து பேசிய விஜயபாஸ்கர், "ஜாதி, மதம் மட்டுமல்ல கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும், உயர்நீதிமன்றம் கூறும் இந்த கருத்தை நான் வரவேற்கின்றேன். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு நாங்கள் வைத்த அழுத்தமான கோரிக்கை காரணமாக மார்ச் மாதத்திற்குப் பின் இந்த ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவுகள் எடுத்து வருவதாகத் தெரிகிறது, இது தவிர்க்கப்பட வேண்டும்.
பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு வைத்து கிராம கமிட்டியாளர்கள், காளைகளை அழைத்து போட்டி நடத்தும் முறையை அமல்படுத்த வேண்டும். இந்த அரசு முக்கியமான எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, அதில் ஒன்றாகத்தான் காளைகள் வளர்ப்போருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.