எத்தனை மோடி எத்தனை அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொடுத்தமைக்காக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று நடைபெற்ற தமிழக முதலமைச்சருக்கான நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஜல்லிக்கட்டு தீர்ப்பு வெற்றிக்கு முதல்வர் நடத்திய சட்ட போராட்டம் தான் காரணம், இந்த விழா முதலில் மதுரையில் தான் நடைபெற இருந்தது, ஆனால் தமிழத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை என்பதால், நன்றி தெரிவிப்பு விழா புதுக்கோட்டையில் நடத்தப்படுகிறது.
இந்த விழா நடந்து விடக் கூடாது என சில கும்பல் திட்டமிட்டது. அதனை கடந்தும் இந்த விழா நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களால் நேர்வழியாக வரமுடியாமல், புறவாசல் வழியாக விளையாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாகத்தான் காளைகள் அவிழ்க்கப்படும், அவர்களின் இந்த செயலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஜல்லிக்கட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தி சாதித்தவர் தமிழக முதலமைச்சர். இதில் அதிமுகவிற்கு உரிமை கொண்டாட எந்த தகுதியும் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழக ஆளுநரின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதாகவும், மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக அவர் செயல்படுவதாகவும், திமுகவின் கிளை செயலாளர்களை கூட பாஜகவினர் தொட்டு பார்க்க முடியாது என்றும், இன்று மட்டும் அல்ல என்றுமே மத்திய அரசுக்கு திமுக அஞ்சியதில்லை என்றார். கருணாநிதி வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார், தொடர்ந்து குரல் கொடுப்பார்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மேலும், “எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. IT, ED, CBI இவை தான் பாஜவின் தொண்டர் படை, தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த படை பணி செய்யும். 2016 ல் இருந்து இதுவரையில் 121 அரசியல் கட்சி பிரமுகர்களை அமலாக்கத்துறை விசாரித்து உள்ளது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இதன் மூலமே மத்திய அரசின் செயல்பாடு தெரிய வந்துள்ளது.
செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி உள்ளனர். எதிர்கட்சிகளின் வீடுகளில் சல்லடை போட்டு தேடும் பாஜகவின் லட்சணம் என்ன என்று, அதானியின் கதையை கேட்டாலே தெரிந்து விடும். இப்போது மத்திய பாஜக அரசு செந்தில் பாலாஜிக்கு குறிவைத்துள்ளனர்.
நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் EDக்கும் பயப்பட மாட்டோம். ஏன் என்றால் நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி வழி வந்தவர்கள். 1975 ஆம் ஆண்டே வருமான வரித்துறை சோதனையை பார்த்தவர் கருணாநிதி. அப்போது கருணாநிதி எதற்கும் அஞ்சாமல் துணிவாக அதனை எதிர்கொண்டார். அவர் வழியில் வந்த நாங்களும் எதற்கும் அஞ்ச மாட்டோம்.
தமிழக ஆளுநர் தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி போல் நினைத்து கொள்கிறார். முதல்வர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் வேலை தான் ஆளுநருக்கு. மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப் பதவி தான் ஆளுநர் பதவி. 20 கோப்புகளை ஆளுநர் இன்னும் நிலுவையில் வைத்துள்ளார்.
அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலும் அடங்கும். முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற முயல்கிறார். அந்த அளவிற்கு அதிமுகவும் பாஜவும் பின்னி பிணைந்துள்ளது. கடந்த 2019, 2021 தேர்தல்களை போல வருகின்ற 2024 தேர்தலிலும் அதிமுக - பாஜக கட்சியினரை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஒருவர் போதும் பாஜகவிற்கு சமாதி கட்ட!:புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி