புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த திருநல்லூரிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாச்சியர் டெய்சிகுமார் உறுதிமொழியுடன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, பின் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன.
ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை 200க்கும் மேற்ப்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினார்கள். இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களைப் தங்கள் பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை. சில காளைகள் தன்னைப் பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடின.