புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வன்னிய விடுதியில் ஜல்லிக்கட்டு, கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டு, கீழதானியத்தில் வடமாடு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையக்கோயில் சுப்பிரமணிய சுவாமி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த நாட்டார்கள் சார்பில் இன்று (ஜனவரி 19) ஜல்லிக்கட்டுப் போட்டி கோயில் திடலில் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்குள்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை காலை 8.30 மணிக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வருவாய்க் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க வீரர்கள், பார்வையாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.