செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொய்தீன் புதுக்கோட்டைமாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) தேசிய தலைவர் காதர் மொய்தீன் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் என்ற முறையில் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் 26 கட்சிகளை கொண்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அதில் யார் யாரெல்லாம் இடம் பெறலாம் என்றும் விவாதிக்கப்பட்டது. பாஜகவின் குறைபாடுகளை மக்கள் விரோத செயல்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. தற்போது பாஜக அரசு இந்திய அரசியல் சாசனப்படி நடைபெறவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநர்களை வைத்து அனைத்து அசம்பாவிதங்களையும் செய்து வருகின்றனர். அரசியல் சாசனத்தை பாஜக மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக எந்த விவாதமும் நடத்தவில்லை.
மேகதாது அணையை கர்நாடகா அரசால் கட்ட முடியாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தான் மேகதாது அணை கட்ட முடியும். அரசியலுக்காக வேண்டுமென்றால் கர்நாடகா இதுபோன்று கூறி வரலாம்.
பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் ஒற்றுமை இந்தியா என்று வைக்கலாம் என்று நான் கூறினேன். பின்னர் அனைவரும் விவாதித்து இந்தியா (INDIA - Indian National Developmental Inclusive Alliance) என்று பெயரை முடிவு செய்து மம்தா பானர்ஜி தான் இதனை அறிவித்தார். இந்த பெயரில் பாஜக கூட்டணி பெயரான என்டிஏ என்று வருவதால் பெயரை மாற்ற வேண்டும் என்று நிதீஷ் குமார் கூறினார். இந்தியன் மெயின் அலையன்ஸ் என்று பெயர் வைக்கலாம் என்று நிதீஷ் குமார் கூறினார்.
இந்தப் பெயர் கவரும் வகையில் இல்லாததால் இந்தியா என்று பெயரை மற்ற தலைவர்கள் தேர்ந்தெடுத்தனர். மாநிலங்களுக்கு மாநிலங்கள் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மத்திய தேர்தலான நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய் கூட திறக்கவில்லை. எந்த மதத்தையும் யாரும் மத வெறுப்புக்கு சாரங்களை மேற்கொள்வது தவறு. இந்தியா என்பது அனைவருக்கும் சமமானது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது சிறப்பு. இந்தியாவை இந்துத்துவா நாடாக்குவதற்காக தான் பாஜக பாடுபடுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு