புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினரும் திருநாவுக்கரசரின் மகனுமான ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி , மருத்துவத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கலுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர், 'மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கும் தொற்று அறிகுறி தெரிந்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் கிராமங்களில் மருந்துவ முகாம்கள் போட வேண்டும்.
மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறார். அதேபோன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருவதும் பாராட்டத்தக்கது.
இருப்பினும், தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியோடு படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும். தற்போது புதிதாக உருவெடுத்துள்ள கறுப்பு பூஞ்சை போன்ற நோய்க்கு மருந்து கொள்முதலை உடனடியாக செய்ய வேண்டும் என்றால், அதற்கு மருத்துவம் செய்வதற்கான மருந்து தமிழ்நாட்டில் தற்போது கையிருப்பில் இல்லை.
உடனடியாக, தனிக்கவனம் செலுத்தி மருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.