புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் படிப்பிற்காக சீனா சென்றுள்ள மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்துவது என்பது அபாயகரமானது. இதற்கு முன்பு முப்படைத் தளபதி அரசியல் பேசியது பரபரப்பாக உள்ள நிலையில், இப்போது ஆர்எஸ்எஸ் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்துவது என்பது அபாயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியது. அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் தொடங்கி வைத்தது. அப்போது வந்த அன்றைய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் பிரதிநிதிகளை டெல்லி வரை அழைத்துச் சென்றார். மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்ற உறுதியை வாங்கிக்கொண்டு ஊருக்குத் திரும்புவதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. தற்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, மக்கள் கருத்து தேவை இல்லை என்று அறிவிப்பு செய்துள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மவுனம் காத்து வருவது ஏன் என்பது தெரியவில்லை. பொது அறிவிப்பு செய்து அதற்கான காரணங்களைச் சொல்லவேண்டும். மவுனம் காத்து திட்டத்தினை கைவிட முயற்சிக்காமல் தப்ப முயலக்கூடாது. டொல்டா பகுதியில் நடந்த அனைத்து கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
ரஜினி இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய படங்கள் பார்ப்பதற்கு திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகள் மட்டுமே இருப்பதாகத் தெரியவருகிறது.