பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி புதுக்கோட்டை:சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜாகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அரியலூர் மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலமாக இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் சாலையில் பேரிகாடுகள் மூலம் தடுப்பு அமைத்து பாதியிலே தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜகவினர் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், "மக்கள் விரோத, இந்து விரோத தமிழக அரசை கண்டித்தும், திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் தீண்டாமை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பெண் அடிமை, டாஸ்மாக் உள்ளிட்டவைகள் ஒழிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்து மதத்தை ஒழிப்போம் என்று குரல் கொடுத்திருப்பது, தங்களுக்கு வாக்களித்த இந்து மக்களுக்கு, திமுக செய்யக்கூடிய துரோகம். இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நாங்கள் பேசவில்லை, சனாதனத்தை தான் பேசி உள்ளோம் என்கிறார்கள்.
இந்து மதத்தை அழிக்க முடியாது: ஆனால் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், திராவிட கழக தலைவர் சனாதனம் வேறல்ல, இந்து மதம் வேறல்ல இரண்டும் ஒன்று தான் என்று பேசி இருப்பது, இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இப்படி இருந்தால் இந்து கோயில்களுக்கு வரக்கூடிய வருமானம் எப்படி, இந்துக்களுக்காக பயன்படுத்துவார்கள்.கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள்.இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கக்கூடியவர்கள் இந்த ஆட்சியிலே இருக்கக் கூடாது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சனாதனத்தை ஒழிப்பதன் மூலம் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை ஒழிக்க முயற்சிக்கிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, உதயநிதி மட்டுமல்ல எத்தனை பேர் பிறந்து வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள்தான் அழிந்து போவார்கள். மேலும் அழிக்கப்பட வேண்டிய சக்தி இவர்கள்தானே தவிர, இந்து மதம் கிடையாது.
உதயநிதி பதவி விலக வேண்டும்:இந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய இவர்கள், நமது கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை ஒழிக்க துடிக்கும் இவர்கள் விரைவில் தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படுவார்கள். கண்டிப்பாக இந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இந்த அமைச்சர்கள் பயணம் செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் பாஜக தொண்டர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
இந்தியா (INDIA)-வில் இருக்கக்கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்து மதத்திற்கு எதிரான உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர்.உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்திற்கு எதிரான ஒற்றைக் வார்த்தையால் இந்த கூட்டணி சுக்குநூறாக உடையும்.
மேலும் திமுக ஆட்சியில் இல்லையென்றாலும் பரவாயில்லை சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
இந்து மக்களுக்கு மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் திமுகவிற்கு வந்துவிட்டது. ஏனென்றால் இந்துக்களுக்கு எதிராக பேசி விட்டோம். நம்முடைய ஆட்சி கலைந்து விடும் என்ற பயம் அமைச்சர் உதயநிதிக்கு வந்து விட்டது. அதனால்தான் திமுக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அவர் பேசி உள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சுற்றுலா வேன் விபத்தில் பலியான 7 பெண்களின் குடும்பத்திற்கு நிவாரணம்... அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்!