நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தின விழா கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், எளிமையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
அந்தந்த மாவட்டங்களில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள், காவல் துறை, மருத்துவம், ஊரகத் துறை, பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தோருக்கு நற்சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கொடியேற்றி வைத்து சமாதானா புறாக்களை பறக்கவிட்டார்.
திருச்சி
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன், கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.