பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை: திலகர் திடலில் நீட் விலக்கு கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முடித்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினை எழுப்பினாலும் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழக மாணவர்களை திசை திருப்புகின்ற வேலையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்து வருகிறார். மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கின்ற செயலாக அவரது பேச்சு உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு வேண்டாம் என்று அனைத்து கட்சியும் கூறும் போது, அதற்கு எதிர்மறையான கருத்து உள்ளது என எடுத்துரைக்கும் வகையில் இது போன்று தமிழிசை சொல்வது என்பது வெட்கக்கேடான செயல் எதுவும் கிடையாது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு திமுக மரியாதை அளிக்கிறது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இந்தி எதிர்ப்பு என்பது திமுக ரத்தத்தில் இன்றளவுக்கும் ஊறி தான் உள்ளது. இந்தியை நாங்கள் என்றைக்கும் ஆதரித்து பேசியது கிடையாது. நாடாளுமன்றத்திலும் ஆங்கிலத்திலும் தமிழில் தான் நாங்கள் பேசுகிறோமே தவிர இந்தியில் பேசுவது கிடையாது" என்றார்.
மேலும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றா?, நீட் தேர்வில் தோல்வி மற்றும் நீட் தேர்வை எழுத பயம் உள்ளிட்டவையில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இது வழக்கமான ஒன்றா?, நீட் தேர்வு இல்லை என்றால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா?, நீட் விலக்கு மசோதா குறித்து குடியரசுத் தலைவரிடம் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் விளக்கம் கேட்டு தான் இன்று வரை தமிழகத்திற்கு கடிதம் எழுதுகிறது தவிர இதை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
நீட் விலக்கு தர முடியாது என்று இதுவரை மத்திய அரசு கூறவில்லை. அப்படி இருக்கும்போது நாம் எப்படி நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று தான் நாம் பார்க்க வேண்டும். அவர் முடிவு எடுப்பதற்கு முன்பாக நாம் சட்டபூர்வமான நடவடிக்கையில் செல்ல முடியாது. ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதை விரைந்து முடிப்பதற்கு அரசு பரிசீலனை செய்யும்" என்று பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: "நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி!