புதுக்கோட்டை: சென்னையில் விரைவில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பை அறிமுக விழா புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து எந்த விதமான விளக்கமும், மறுப்போ ஆளுநரிடமிருந்து இதுவரை தமிழக அரசு பெறவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு விவகாரத்தில், தமிழக அரசு உரிய பதில் மனுவை நீதிமன்றத்தில் தகவல் செய்துள்ளது.
சிறைத்துறையில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டும் தான் செந்தில்பாலாஜிக்கும் வழங்கப்படுகிறது. அவருக்கு வேற எந்த சலுகைகளும் சிறைத்துறை சார்பில் வழங்கப்படவில்லை. தற்போது அவருடைய வழக்கு விசாரணைக்கு வருவதால் செந்தில் பாலாஜிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக சிறையில் அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவது போல் மாய தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் சார்பில் விசாரிக்கப்பட்டு வருவதால் வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முயற்சி நடக்கிறது. சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதை தமிழக முதல்வர் விரும்ப மாட்டார் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.