புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில், இன்றைய தினம் இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் ரூ.58.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.