புதுக்கோட்டை:சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட தடை செய்தல், ஒழுங்குமுறைபடுத்துதல், சட்டத்தின் அவசரகால சட்டத்தின் காலம் நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது.
நேற்று மாலைக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்துவதற்குதான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத் தெளிவாக தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது.
99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையைதான் தமிழ்நாடு அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதப்படுத்துகிறார் என்பது அவருக்குதான் தெரியும் என்று கூறினார்.