தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - Citizenship Amendment Act protest

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

CAA
CAA

By

Published : Jan 31, 2020, 1:22 PM IST

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்திய ஒன்றியத்திலுள்ள சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டிலும் இதனை எதிர்த்து நாள்தோறும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வஉசி மைதானம் வரை மனித சங்கிலி போராட்டம்

கோவை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கட்சியினர், இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து வஉசி மைதானம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பட்டுக்கோட்டை டவுன், அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தேசியக்கொடி ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்


புதுக்கோட்டை:

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், பழனியப்பா, திலகர்திடல் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய அரசின் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல கோட்டைப்பட்டினம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ப. சிதம்பரம் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு: 6 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை

ABOUT THE AUTHOR

...view details