தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரம் அரிவாளால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு! - புதுக்கோட்டை செய்திகள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஆலங்குடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் அரிவாளால் கொத்தி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரம் அரிவாளால் கொத்தி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
வாக்குப்பதிவு இயந்திரம் அரிவாளால் கொத்தி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

By

Published : Apr 6, 2021, 7:00 PM IST

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுத் தொடங்கி, தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆனந்தன் (45) என்பவர் மதுபோதையில், வாக்குச்சாவடி மையத்தில் உள்ள காவல் துறையினரிடம் ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் வாக்குச்சாவடி மையத்தின் பின்புறமாகச் சென்று, தான் வைத்திருந்த அரிவாளால் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்கள், காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தனை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சார் ஆட்சியர் ஆனந்த்மோகன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தடையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேடசந்தூரில் திமுகவினர் தேர்தல் விதிமீறல்: கோதாவில் குதித்த அதிமுக!

ABOUT THE AUTHOR

...view details