புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அறந்தாங்கியில் பாஜக சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆதரவற்றோருக்கு மளிகை பொருள்கள், காய்கறிகள் மற்றும் மதிய உணவும் வழங்கினார். இதில், 350 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது, "மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்தான் இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகமாக பரவியுள்ளது. இதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். 48 ஆயிரத்து வென்ட்டிலேட்டர்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதால் வெளிநாட்டுக்காரர்களை நம்பவேண்டிய அவசியமில்லை.
இந்தக் கரோனா காலத்தில், திமுக, காங்கிரஸ் மற்றும் திமுகவினர் போன்ற பிற கட்சிகள் கடன் தள்ளுபடிக்கும், தள்ளி வைப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ராகுல் காந்தி போன்ற ஞானசூன்யம் வேறு யாரும் இருக்க முடியாது. இது பற்றிய அடிப்படை பாடம் தெரியவில்லையென்றால், அவரது நெருங்கிய நண்பர் ரகுராம் ராஜனிடம் தகவலைக் கேட்டு பேசலாம்" என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க:சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!