புதுக்கோட்டை
துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு DTCU சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதன் பின்னர் பேசிய DTCU மாநில பொதுச்செயலாளர் விடுதலை குமரன், "மத்திய அரசும், மாநில அரசும் தனிப்பட்ட முறையில் கடன்களை வாங்கி செலவு செய்து கொண்டிருக்கிறதே தவிர தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொள்வது கிடையாது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கடமையாகும்" என்றார்.
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்தல், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.