புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன்(46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய வாகனத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது, விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராபின்சன் வந்த வாகனத்தில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட காவலர்கள், ரத்தக் கறைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வாகனத்தில் ரத்தக் கறையுடன், இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியைச் சேர்ந்த ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருவப்பூரைச் சேர்ந்த ராஜேஸ், சுரேஷ், பாசிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரைச் சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ராமன், ராஜேஸ், வெங்கடாஜலபதி, சாமிவேல் பிரின்ஸ் ஆகிய நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.