புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள முல்லையூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்-புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் மணிகண்டன். இவரும் இவரது அண்ணனான நவநீதனும், சூரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது தந்தை ராஜேந்திரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.
ஆனால் இதனால் சற்றும் மனம் தளராத மணிகண்டனின் தாய், விடாமுயற்சியுடன் இருவரையும் கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகிறார். கடந்த மே மாதம் விடுமுறையின் போது மணிகண்டன், அவரது சித்தப்பா வீட்டிற்குச் சென்ற போது களிமண்ணால் பொம்மைகள் மற்றும் உருவப்படங்களைச் செய்ய அவரது சித்தப்பா கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் தான் தமிழக அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழாவை அறிவித்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவன் மணிகண்டன், பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் பொம்மை ஒன்றை, களிமண்ணால் தயாரித்து வெற்றி பெற்றார். பின்னர் விராலிமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில், களிமண்ணில் பாரதத் தாயின் முகத்தைத் தத்ரூபமாகத் தயார் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதனால் மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். இதன் வெற்றி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட. இந்நிலையில் அவரது ஆசிரியர் போன் மூலம் மணிகண்டன் வெற்றி பெற்றதாக, மகிழ்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார்.
மகனின் வெற்றி குறித்து அவரது தாய் கூறுகையில், ”மாநில அளவில் முதலிடம் பிடித்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், குடும்ப வறுமையை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு தான் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். எனவே தமிழக அரசு எங்களுக்கு நிதி உதவி வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் உருக்கமாக கூறினார்.
கலைத் திருவிழாவில் மாநில அளவில் மாணவன் முதலிடம் பிடித்தாலும், வறுமையின் காரணமாகக் கொண்டாட மனமின்றி தவித்து வருகின்றனர். தங்கள் வறுமையை போக்கி மென்மேலும் உயரங்களுக்குச் செல்ல தமிழக அரசு குடும்பத்திற்கு நிதி உதவிவழங்க வேண்டும், என்பதே அந்த குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:'கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கினால்...' - முதலமைச்சர் அறிவித்த சூப்பர் பரிசு