புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கோட்டை காலனியைச் சேர்ந்த டெல்பின் ஜொவிதா (8), அருளானந்த ஜெரோம் (14) ஆகிய இரு குழந்தைகளும் கடந்த 10ஆம் தேதியன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர்.
அவர்களை குழந்தைகள் நல மருத்துவ வல்லுநர்கள் வசந்த்குமார், ஆசைதம்பி, பொது மருத்துவ வல்லுநர்கள் ஜோதி, ஆனந்த், மயக்க மருத்துவர்கள் கார்த்திகேயன், டேனியல் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு பரிசோதித்தது.
அப்போது இருவருக்கும் ரத்தம் உறையும்தன்மை குறைந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து இருவருக்கும் விஷ முறிவு மருந்து அளிக்கப்பட்டது.
இருப்பினும் நரம்பு மண்டல பாதிப்பின் காரணமாக இரு குழந்தைகளுக்கும் நுரையீரல் செயலிழந்ததால் உடனடியாக வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டது.
மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சையின் காரணமாக மூச்சுத்திணறல் ஐந்து நாள்களுக்குப் பிறகு சீரானதை அடுத்து செயற்கைச் சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இரண்டு வார சிகிச்சைக்குப் பின்பு இரு குழந்தைகளும் எவ்வித பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதைப்பற்றி மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறுகையில், "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, பாம்புக்கடியால் உயிருக்குப் போராடிய இரு குழந்தைகளையும் செயற்கை சுவாசமளித்து காப்பாற்றியது பாராட்டத்தக்கது.
தனியார் மருத்துவமனையில் சுமார் மூன்று லட்சம் வரை செலவாகக்கூடிய இந்தச் சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.