கிள்ளனூர்:புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூரில் பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து விட்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்ப முயன்றது. திருட்டு கும்பல் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் விரட்டிப் பிடிக்க முயன்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்ற பொது மக்கள் மச்சுவாடி பகுதியில் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.
ஆட்டோவில் இருந்த இரு சிறுமிகள், பெண் உள்பட ஆறு பேரை பொது மக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. திருட்டுக் கும்பல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர். மேலும் பொது மக்கள் தாக்கியதாக கூறப்படும் 10 வயது சிறுமி கற்பகாம்பிகா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில், திருட்டுக் கும்பல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஸ்வரசாமி, மெய்யசாமி மற்றும் மகள்கள் கற்பகாம்பிகாள், ஆதிலட்சுமி ஆகியோர் என தெரிய வந்தது.
கிள்ளனூர் அதனை சுற்றியுள்ள ஆழ்வாபட்டி, கீழையூர், அரையான்பட்டி, வாரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோயில்களின் வெளியே மாட்டப்பட்டிருந்த வெண்கல குத்துவிளக்கு மணி உள்ளிட்ட பொருட்களை கும்பல் திருடி வந்தது தெரியவந்தது. மேலும் திருடிய பொருட்களுடன் ஆட்டோவில் தப்ப முயன்ற போது பொது மக்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.