புதுக்கோட்டை:சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லட்சுமணன்(39). இவர் கடந்த 7ஆம் தேதி தனது மனைவி ஏடிஎம் அட்டையைக் கொண்டு பொன்னமராவதி புதுப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார்.
அப்போது ஏடிஎம் மையத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், லட்சுமணனுக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க உதவி செய்துள்ளார். அந்தக் கார்டில் பணம் வராததால், வீட்டிற்குத் திரும்பிச் சென்ற லட்சுமணன் தனது மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்சுமணனின் மனைவி அக்கவுண்டில் இருந்து பணம் 40 ஆயிரம் எடுக்கப்பட்டது செல்போன் குறுஞ்செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தனியார் நிறுவனத்தில் இந்த ஏடிஎம் கார்டு மூலம் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கப்பட்டுள்ளது. அப்போது தான் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது, உதவி செய்வது போல் நடித்து கார்டை மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லட்சுமணன் தான் ஏடிஎம் மையத்தில் ஏமாந்ததையும், அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்தது குறித்தும் பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம், ஏட்டு சார்லஸ், காவலர்கள் விஜய், கலா ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.