புதுக்கோட்டை :ஆலங்குடி அருகேவுள்ள பள்ளத்துவிடுதி ஊராட்சிக்கு உள்பட்ட வகுத்தாண்டி குடியிருப்பு என்னும் பகுதியில் 4 குடும்ப மக்கள் மட்டுமே வசித்து வருவதாகவும்; ஆனால் இந்த பகுதியில் 26 குடும்ப மக்கள் வசிப்பதாகவும் பொய் கணக்கு காட்டி, அவர்களுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், இதில் திருவரங்குளம் ஒன்றிய அதிகாரிகள் கணக்கு பதிவேற்றம் செய்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நிதி முறைகேடு செய்துள்ளதாக பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்டத்தலைவர் முருகேசன் திருவரங்குளம் ஒன்றிய அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு நான்கு குடும்ப மக்களுக்கு, அந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியைச்சேர்ந்த மக்கள் கூறுகையில், "நான்கு குடும்ப மக்களும் 12 வாக்காளர்களும் மட்டுமே இந்த வகுத்தாண்டி குடியிருப்புப்பகுதியில் உள்ளனர். ஆனால், அதிகாரிகள் 26 குடும்பங்கள் இருப்பது போலவும் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது போலவும் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த நான்கு குடும்ப மக்களுக்கும் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. அருகே உள்ள குடிநீர் மேல்நிறை நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஏணிப்படி இல்லாததால் அந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து தூய்மையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.