புதுக்கோட்டை:அறந்தாங்கியில் உள்ள காரைக்குடி சாலையில் NKB என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அறந்தாங்கி பகுதிகளில் இருக்கக்கூடிய எளிமையான நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குழு என்ற பெயரில் பணம் தருவதாக ஏஜென்டாக உள்ள குணநாதன் ஆசை வார்த்தை காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பணமாக 10 நபர்கள் குழு சேர்ந்து ஒரு நபருக்கு ரூபாய் 1,341 வீதம் ரூபாய் 13 ஆயிரத்து 410 செலுத்தினால், ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் தரப்படும் என கூறியதாக தெரிவிக்கின்றனர்.
அந்த ஆசை வார்த்தையை நம்பிய அப்பகுதி மக்கள் 52 குழுக்களாக சேர்ந்துள்ளனர். அதில் முழுமையாக 32 குழுக்களைச் சேர்ந்த நபர்கள் பணம் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனிநபர் கடன் தருவதாகக் கூறி, 231 நபர்களிடம் முன் தொகையாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, 1 லட்சம் ரூபாய்க்கு 5 ஆயிரம் டிடி (DD) எடுத்துக் கொடுக்க வேண்டும்.
மேலும், இதேபோல 7 லட்சம் ரூபாய் வரை கடன் தருகிறோம், அதற்கு ரூ.35 ஆயிரம் டிடி எடுத்து கொடுக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய பொதுமக்கள் பணத்தையும் செலுத்தியுள்ளனர். பின்பு இன்று பணம் ஏறும், நாளை பணம் ஏறும் என கூறியதால், சந்தேகம் அடைந்த நபர்கள் ரகசியமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.