கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா (30), வி.நாகராஜ் (52), எஸ்.செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மறுநாள் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. பின்னர், இலங்கை கடற்படையினர் தேடி அடுத்தடுத்த நாட்களில் 4 மீனவர்களையும் சடலங்களாக மீட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர்களது சடலங்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அவர்களது உடல் இன்று கொண்டு வரப்பட்டது. அவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.