புதுக்கோட்டை:அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் வம்பன் நால்ரோடுன் பகுதியில் இன்று (அக். 29) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "வாரிசு அரசியல் செய்யும் கட்சி திமுக என்றும் யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கிற கட்சி அதிமுக அல்ல. அதிமுகவின் ஆட்சியில் ஏழை பெண்ணுக்கு திருமணம் என்றால் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில் இலவச பெட்டகம் எனக் கொடுத்து வந்ததை தடுத்துவிட்டனர்.
ஆனால் இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னவர்கள் அனைத்து குடும்ப தலைவிக்கும் கொடுக்காமல் தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே கொடுத்துள்ளனர். ஏன் இந்த பாகுபாடு அந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஆயிரம் கண்டிஷன் போடுகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ளவர்களுக்கே இது அளிக்கப்படும் என கொடுத்துள்ளனர். ஆனால் இவர்கள் 27 மாதங்களாக உள்ள பாக்கியை தரவில்லை. ஆகவே திமுகவினர் சட்டையைப் பிடித்து எங்கே எங்களது ரூ.27 ஆயிரம் என பொதுமக்கள் கேட்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
எடப்பாடியாரிடம் நீங்கள் மீண்டும் முதலமைச்சரானால், ஏழைகளின் திருமணத்திற்கு ரூ.50,000, ஒரு பவுன் தங்கம் தர வேண்டும் என்று கூறினேன். ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் கொடுப்போம் என அவர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு காவிரி கொள்ளிடம் உபரி நீர் வாய்க்கால் வெட்டி தண்ணீரும் கொடுப்போம் என கூறினார்.
தாலிக்கு தங்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் அல்ல. அது அம்மாவால் கொடுக்கப்பட்ட ஆட்டு திட்டம், அம்மா மெடிக்கல், அம்மா ஸ்கூட்டி, பிரசவத் தொகை ரூ.18,000, அம்மா ஊட்டச்சத்து பெட்டகம், மாணவர்களுக்கு லேப்டாப் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா இலவசமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அது மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் நிறுத்திவிட்டும் இந்த ரூ.1,000 கொடுத்தால் என்ன? ஆகவே, இந்த திமுக ஆட்சி தொடரவேண்டுமா? என யோசியுங்கள். இல்லையெனில், வைகோ போல தோளில் துண்டு போட்டு பேச முடியுமா? அவர் திமுக ஆட்சியில் கெடுத்தது; பின்னர், திமுக தான் கொடுத்தது என மாறி மாறி பேச முடியாது' என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், 'இந்த ஆயிரம் ரூ.1,000 உங்கள் கைக்கு வருவதற்கு முன்பே, 3 கிலோ தக்காளி ரூ.1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது திமுக முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு காலத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரி, கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். சகோதரி கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'மதுவிலக்கு' கொண்டு வருவோம் என கூறினார். ஆனால், யாரையுமே காணவில்லை.
திருமுருகன் காந்தி எங்கே? சமூக ஆர்வலர்கள் எங்கே? அதிமுக ஆட்சியில் போராட்டம் செய்து கொண்டவர்கள் எங்கே? யாரையும் காணவில்லை. ஆசிரியர் ஆசிரியைகள் தற்போது நொந்து உள்ளனர்.
பஞ்சாயத்துக்கு நிதியில்லை ஒன்றிய குழுவுக்கு நிதியில்லை. அதே நேரத்தில் இப்பகுதியில் ஒரு விபத்து நடந்தால் அவரை உடனடியாக 10 கி.மீ. தூரம் உள்ள புதுக்கோட்டைக்கு சென்றால் ரூ.350 கோடியில் 11 மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் சேர்த்து சேர்க்கலாம். அதனை கொடுத்தது அதிமுக ஆட்சி. காவிரி, குண்டாறு, வைகை உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்தது, அதிமுக ஆட்சி. இவ்வளவு நன்மைகளை செய்தோம். தற்போது நிறுத்தப்பட்ட எல்லா நலத்திட்டங்களும் மீண்டும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும்' என பேசினார். ஆகவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:கேரள குண்டுவெடிப்பு : தமிழ்நாட்டில் உஷார் நிலை! எல்லையோர மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு!