மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை:அதிமுக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கரின் 49 ஆவது பிறந்த நாளை ( ஏப்.08 ) முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும், அதிமுகவினரும், முக்கிய பிரமுகர்களும், சமூக அமைப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் கோயில்களில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து பிறந்த நாளை கொண்டாடினர். அதிமுக மட்டுமின்றி அரசியலிலும் தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு, எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடியவர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
இவர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ஆதரவை கட்டமைத்து வைத்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பார்வையற்றோர் அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அங்கு வந்த விஜயபாஸ்கருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் பள்ளி உள்ளே நுழைந்த விஜயபாஸ்கருக்கு பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருபுறமும் நின்று வரவேற்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் "ஹாப்பி பர்த் டே டூ யூ" என பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், பிறந்தநாள் கொண்டாடும் விஜயபாஸ்கரை வாழ்த்தி, கவிதை ஒன்றை வாசித்தார். அப்போது நெகிழ்ச்சியாக காணப்பட்ட விஜயபாஸ்கர், கண்கலங்கி கவிதை வாசித்த மாணவரை கட்டியணைத்து, கைகுலுக்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அனைத்து மாணவர்களையும் அரவணைத்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை கேட்டு அறிந்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு, குளிர்பானம், பாட புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், பள்ளிக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இதேபோல் புதுக்கோட்டையில் உள்ள நேசக்கரம் முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு உணவு வழங்கி, அங்குள்ள முதியோர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை நகர செயலாளர்கள் எஸ்.ஏ.எஸ்.சேட் என்ற அப்துல்ரகுமான் மற்றும் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:”கட்சியின் கடைசி தொண்டனாக இருந்து முதலமைச்சர் இன்று இந்த நிலமைக்கு வந்துள்ளார்” - ஜிவி பிரகாஷ் புகழாரம்!