தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய அறிவிப்பு! நீதிமன்றம் உத்தரவு! - today latest news

C Vijayabaskar property hoarding case: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கில் நவம்பர் 15ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

C Vijayabaskar property hoarding case
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு.. நவம்பர் 15 நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 12:04 PM IST

புதுக்கோட்டை: தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 முதல் 2021 வரை ஆறு ஆண்டுகளில் 35 கோடியே 79 லட்ச ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கிடைத்து உள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவு சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்குகள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 17-10-2021 அன்று இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 19 மாதங்கள் ஆகிய நிலையில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோருக்கு எதிரான 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவருக்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனவும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் சில பக்கங்கள் இல்லை என்றும் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

இதனை அடுத்து வழக்கு விசாரணையைக் கடந்த அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விடுபட்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது நடைபெற்ற விசாரணையில் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட பக்கங்களை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 30 ஆம் தேதிக்கு (நேற்று) வழக்கு விசாரணையை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (அக் 30) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்தும், அன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அப்போது அவர்களது தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் குழந்தை திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details