புதுக்கோட்டை: தமிழர்களின் சிறப்பாக கருதப்படும் தைப்பொங்கல் தினத்தன்று நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.06) கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்கு வாகனங்கள் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளது.
மேலும், போட்டியில் காயமடைபவர்களை தீவிர சிகிச்சைக்கு அருகிலுள்ள கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காளைகளுக்கு எந்த ஒரு காயங்கள் ஏற்பட்டாலும், கால்நடை மருத்துவ முகாம்களும் போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, பாதுகாப்புப் பணியில் தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னதுரை, திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மேலும், இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களமாடுகின்றனர். முன்னதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அமைச்சர் ரகுபதி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, போட்டி ஆரம்பமானது.