முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுகோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தச்சங்குறிச்சியில் காலை 8.00 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது, தொடர் போராட்டத்தால் இன்று (ஜன.8) நடைபெறுகிறது. இந்த போட்டியில் 800 ஜல்லிக்கட்டு காளைகளும் 300 மாடி பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பின்னர் வாடி வாசலில் சீறிக்கொண்டு வந்த மாடுகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜபாஸ்கரின் வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகள் கலந்து கொண்டுள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி மாதம் முதல் தொடங்கி ஜுன் மாதம் வரை நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வருட வருடம் தச்சங்குறிச்சியில் தான் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து அவணியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இதையும் படிங்க: Men's Only ஆண்கள் மட்டுமே பங்கேற்ற மணக்கும் மதுரை கறி விருந்து!