தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தச்சங்குறிச்சியில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. ஆன்லைன் முறையை ரத்து செய்ய கோரிக்கை!

First Jallikattu: தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி
2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 3:33 PM IST

2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடைபெறும். அந்த வகையில், அடுத்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி புதுக்கோட்டை, தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு என்று பெயர்போன பல ஊர்கள் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளன. ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு, நேர்த்தியான விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற 2024ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ஆம் தேதி, தச்சங்குறிச்சியில் இருக்கும் விண்ணேற்பு அன்னை தேவாலய திருவிழாவை ஒட்டி நடைபெற உள்ளது. இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க செயலாளர் கனகராஜன் கூறியதாவது, “2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2023, ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், ஜனவரி 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, அன்றைய தினம் போட்டி நடைபெறாமல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, ஜனவரி 8ஆம் தேதி போட்டி நடைபெற்றது.

வருகிற 2024ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி நடத்த ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் கிராம மக்கள் சார்பில், அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து, அன்றைய தினம் அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதால், ஜனவரி 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலில் கால்கோள் ஊன்று விழாவானது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது.‌

இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6ஆம் தேதி தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர்கள், போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காளையர்களும் காளைகளைத் தழுவ பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் பதிவு: கடந்த வருடம் ஆன்லைன் மூலம் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், சிறந்த காளை வளர்ப்போர் மற்றும் காளை பிடிப்பவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது, காளை வளர்ப்போருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து, அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது. தற்போது அது மறைந்து விட்டது.

ஆன்லைன் முறை மூலமாக பணம் கொடுத்து டோக்கன்கள் வாங்குவதால் கிராமங்களில் நட்பு வளர்வது, இணக்கமான சூழல் உருவாவது போன்றவை தடைபட்டது. எனவே, இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆன்லைன் முறையை ரத்து செய்து, டோக்கன் முறையை கிராம ஜல்லிக்கட்டு அமைப்பினரிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு கட்டுப்பாடு: மேலும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அந்தந்த மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது.

அந்த வகையில், புதுக்கோட்டை தென்னலூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு 7 வாடிவாசல்களைக் கொண்டது.
மற்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறைந்தபட்சம் இரண்டு வாடிவாசல்களைக் கொண்டிருக்கும்.
புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும் காளைகள், பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளான அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறந்த காளைக்கான விருதையும் பெற்று வருகிறது.

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் 500 இடங்களில் நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள், தற்பொழுது 200 இடங்களாக உள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் நிலையில், தற்பொழுது 150 ஜல்லிக்கட்டு காளைகள் மட்டும் பங்கு பெறுகிறது. எனவே, வீர விளையாட்டை வளர்க்கும் வகையில், தமிழக அரசு இத்தகைய விதிமுறைகளை தளர்த்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்டவைகளை அளித்து, ஊட்டச்சத்துமிக்க சத்தான தீவனங்கள் கொடுத்து வளர்த்து வரும் சூழலில், அரசு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நிதியுதவி அளித்து உதவ வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:2024 புத்தாண்டு கொண்டாட்டம்:புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

ABOUT THE AUTHOR

...view details