புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழிபிறை கிராமத்தில் பொதுத்துறை வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு வைத்து பராமரித்து வருகின்றனர். இங்கு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஒன்றரை வருடமாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே மத்திய அரசின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற மனு செய்திருந்தனர். மனு செய்து பல மாதங்கள் கடந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் இருந்ததால் அவ்வப்போது விவசாயிகள் வங்கி மேலாளரை அணுகி இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் வங்கி மேலாளருக்கு தமிழ் தெரியாததால் கேள்வி கேட்பவர் மீது கோபப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று(செப் 19) காலை வங்கி மேலாளரை வங்கிக்குள் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கி மேலாளர் ஹிந்தி மொழியில் தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனை அறிந்த சிலர் வங்கி மேலாளரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.