தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மேட்டுவயல் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் இளையராஜா (36), இவரது மனைவி சத்தியப்பிரியா (32). இவர்களுக்கு பத்து வயதில் ஹரிஸ் மற்றும் ஏழு வயதில் நிவாஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இளையராஜா தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு மேலவட்டம் பெருமாள்பட்டியில் உள்ள முகம்மது ஹாசிம் என்பவர் நடத்திவரும் செங்கற்சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தனர்.
இளையராஜா மற்றும்அவரது மனைவி, குழந்தைகள் இவர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிவது குறித்து புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் தண்டபாணிக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தாசில்தார் பரணி, காவல்துறையின் உதவியுடன் செங்கற்சூளைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இளையராஜா வீடு கட்டுவதற்காக முகம்மது ஹாசிமிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு வட்டி கட்டமுடியாமல் போனதால், அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, உடனடியாக அவர்களை மீட்டு இளையராஜாவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.