தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: பேரிடர் காலங்களில் தொடர்புகொள்ள வசதி! - Chief Secretary to Government Shambhu Kallolikar

புதுக்கோட்டை: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் 1077 மற்றும் 04322-222207 என்ற 24 மணி நேரம் செயல்படும் ஆட்சியரக தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலருமான ஷம்பு கல்லோலிகர் தெரிவித்துள்ளார்.

pdk
pdk

By

Published : Oct 15, 2020, 9:58 PM IST

வட கிழக்குப் பருவமழை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, முன்னிலையில் இன்று (அக்.15) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் கல்லோலிகர் பேசுகையில், "கடந்தகால நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு வடகிழக்குப் பருவமழையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மழைக்காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள், புயல் பாதுகாப்பு மையங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குடிநீர் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்கள் தங்கும் இடங்களிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து பாதுகாப்பாக வழங்கவும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குளங்கள், ஊருணிகள் ஏதேனும் உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்தால், அதனை உடனுக்குடன் சரிசெய்வதுடன் தேவையான மணல் மூட்டைகளையும் தயார்நிலையில் வைத்திருக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாயும் மின்கம்பங்கள், மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்வதுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று இடி, மின்னல்களின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கால்நடைகளை இத்தருணத்தில் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் தேவையான விழிப்புணர்வுகளைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அலுவலர்கள் உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details