புதுக்கோட்டை: சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று(ஜூன்.18) புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், இளஞ்சாவூர் ஊராட்சி, மெய்யூரணி மற்றும் அரிமளம் சத்திரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, உடனிருந்தார்.
அதிகரிக்கும் நெல் கொள்முதல் நிலையங்கள்: அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது,
அதிகரிக்கும் நெல் கொள்முதல் நிலையங்கள்:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடர்ந்து திறந்து வருகிறது.
அதன் அடிப்படையில் திருமயம் வட்டம், மெய்யூரணி மற்றும் அரிமளம் சத்திரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.
அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல்லிற்கு உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப ஆலவயல், மேலத்தானியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீட்டிக்கப்படவுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் நேரம்:
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்