புதுக்கோட்டை மாவட்டம் டவுன்ஹால் அருகே உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக வளாகத்தில் அரசு உயர் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி அப்போதே, 5ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்புவரை தரம் உயர்த்தப்பட்டது. நடுநிலைப் பள்ளி என்ற பெயர் வைப்பதற்கு முன்பாகவே, தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர் துவக்கப்பள்ளி என்று பெயர் வைத்துள்ளனர்.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மலிவான மற்றும் பயன்படாத பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயாரித்து அதனை கண்காட்சியில் பார்வைக்காக வைத்தனர்.
இது குறித்து மாணவர்கள் தெரிவித்ததாவது, நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் தவிர நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் தூக்கி வீசுகிறோம் இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நாங்கள் இந்த கைவினைப்பொருட்களை மண், உப்பு,பழைய செய்தித்தாள், கோலப்பொடி, பழைய அட்டை, நெகிழிப்பை, உல்லன் நூல், பழைய காகிதம் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்தோம், இதற்கு எங்களது ஆசிரியர் பயிற்சியளித்துமிகவும் துணைபுரிந்தார். என்று கூறினர்.