புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக-வின் மாவட்ட முன்னாள் நிர்வாகி ஜாபர் அலியின் நினைவு நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் இன்று(டிச.10) நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது, "சென்னையில் சுகாதாரத்துறை செயல்பாடு சுனக்கத்தில் உள்ளது. அரசின் நிர்வாகம் செயலிழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பேரிடரில் உயிரிழந்த நிலையில் சாலையில் கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
பெருகிவரும் நோய் அபாயம்: அவ்வப்போது இயற்கையின் கொடூர சீற்றங்கள் என்பது எதிர்பாராத ஒன்று தான். இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்தந்த அரசிடம் திறன் வேண்டும். இதுபோன்ற வேளைகளில் மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதாரம் அரசாங்கம் மட்டும்தான். ஆனால் திமுக அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் முழுவதுமாக தோல்வி அடைந்து விட்டது.
தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை மிகவும் தாமதமாக இயங்கி வருகிறது. சுகாதாரத்தின் அடிப்படை செயலாகக் கருதப்படும், சாலைகளில் பிளிச்சிங் பவுடர் போடுவதைக்கூட சென்னை நகரில் உள்ள சாலைகளில் அரசு போடவில்லை. அதேப்போல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெருவாரியாக எழுந்துள்ளது. இந்த முறையின் பயன்பாடு பாதிப்படைந்த சென்னை மாநகரில் எந்த இடத்திலும் கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.