புதுக்கோட்டை:பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 15 பேர், பள்ளி ஆசிரியர்களான இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தலைமையில் தொட்டியத்தில் நடக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்குச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் வழியில், கரூர் மாயனூர் அணைக்கட்டில் காவிரி கரையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக, 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து மீட்பு பணிகள் நடத்தப்பட்டு, உயிரிழந்த 4 மாணவிகளின் உடலும் மீட்கப்பட்டது. இதனையடுத்து மீட்கப்பட்ட மாணவிகளின் உடல்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அங்கு உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்தியது தவறு என கூறி கரூரில் 4 மாணவிகளின் பெற்றோர்களும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கரூரில் அவரது உடல்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் இலுப்பூரிலும் சாலை மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து 4 மாணவிகளின் உடல்களும் அவர்களது சொந்த ஊரான பிலிக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 4 மாணவிகளின் உடல்களும், சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மாணவிகளின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், “4 மாணவிகளின் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். அவசரம் அவசரமாக மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தது எதற்கு? அவசர நேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஒப்பதலோடு 7 மணிக்கு மேலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்ற விதி உள்ளது.