புதுக்கோட்டை:அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், "அதிமுகவின் எதிர்காலம், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரகாசமாக உள்ளது. அதிமுகவிற்கு அதிகப்படியான வெற்றி வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திறக்காவிட்டால், அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரையும், 24 மணி நேரமும் செயல்பட சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு, உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இந்த பிரச்னையை அரசு கண்டும் காணாமல் போயிருப்பதன் விளக்கத்தைக் கூற வேண்டும். மக்கள் பிரச்னையை ஓங்கி குரல் கொடுக்கின்ற இயக்கமாக அதிமுக உள்ளது. ஆனால், ஆளுங்கட்சி மிகவும் சுணக்கமாக செயல்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொலிவோடும், வலுவோடும் உள்ளது.