புதுக்கோட்டை:புதுக்கோட்டை சமஸ்தானம் என்பது மிகவும் பழமையான சமஸ்தானமாகும். சுதந்திர இந்தியாவில் இந்தியாவோடு இணைந்த கடைசி சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்தான். அன்றைக்கு கஜானாவில் இருந்த அனைத்துப் பொருட்களையும், நாணயங்களையும் இந்தியாவிற்கு அர்ப்பணித்ததோடு மன்னர்கள் ஆண்ட அரண்மனை உள்ளிட்டவைகளையும் அரசிடம் அப்போதைய மன்னர் ஒப்படைத்தார்.
அதே போன்று, தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் மன்னரின் அரண்மனையையும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் புதுக்கோட்டை மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் ஒப்படைத்தார். அவருக்கு கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அந்த நூற்றாண்டு விழாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகோபாலத் தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதன்படி புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று அறிவித்தார்.
ஆனால், ஓராண்டு காலம் ஆகியும் இதுநாள் வரை மணிமண்டபம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தரவில்லை குறிப்பாக, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மன்னர் நூற்றாண்டு விழாக் கமிட்டினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் முன்பக்கத்தில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், வேறு இடத்தில்தான் நாங்கள் ஒதுக்கி தருவோம் என்று மாவட்ட நிர்வாகம் கூறிவிட்டது. இருந்தாலும் ஓராண்டு காலமாகியும் இதுனால் வரை இடம் ஒதுக்கப்படாமல் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் மன்னரின் 101-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது.