ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மல்லபாலம் என்ற கிராமத்திலிருந்து 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள குறும்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்தனர்.
அவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் தவிர, மீதமுள்ளவர்கள் தங்களின் ஒரு மாதப் பணி முடிந்து, சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். சொந்த ஊர் திரும்பாத 21 பேரும் குறுங்குளம் சர்க்கரை ஆலைக்குட்பட்டப் பகுதிக்கு கரும்பு வெட்டும் பணிக்குத் தொடர்ந்து சென்று வந்தனர். அதன்பின் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்திருந்தபோதிலும், கரும்பு ஆலை நிர்வாகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தைச் சரியாக வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மே மாதம் முதல் வாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு, தங்களை சொந்த ஊர் அனுப்புமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை பரீசிலித்த காவல் துறையும், வருவாய்த்துறையும் அவர்களை ஆதனகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரண்டொரு நாட்களில் அனுப்பிவிடுவதாகவும், அவர்களுக்குத் தேவையானதை செய்வதாகவும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், உறுதியளித்து 20 நாட்களைக் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமலும், அவர்கள் ஊர் திரும்ப எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.