புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் முன்பு தொடங்கி உள்ளது. இக்கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், அரசு அனுமதியுடன் வழிபாடு நடத்தப்பட்டது.
இதனால் சமாதானம் ஏற்படுத்தும் விதமாக கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களிடம் இருந்தும் அரிசி , வெல்லம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பெற்று ஒரே பாத்திரத்தில் அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அந்த கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களும் பங்கேற்றனர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,மாநில ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே இதே கிராமத்தில் பொங்கல் விழாவுக்காக வந்த ஆர்டிஓ குழந்தை சாமியை பெண்கள் சிலர் முற்றுகையிட்டனர். குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் சமத்துவ பொங்கல் வைப்பதில் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து பொங்கல் விழாவுக்காக வந்த மூன்று அமைச்சர்களும் மாற்று பாதையில் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.