புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் முத்து ராஜா மற்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளான திருமயத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன், விராலிமலை தொகுதி பழனியப்பன் ஆகியோரை ஆதரித்தும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன், காந்தர்வ கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சின்னத்துரை ஆகியோரை ஆதரித்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்திய திமுக
பெண்கள் பயன்பெறும் வகையில் திருமண உதவித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு எனப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியது திமுக அரசுதான். திமுக காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்கள்.
அதிமுகவில் ஒருவர் ஜெயித்தாலும் அது பாஜக ஜெயித்ததாக மாறிவிடும். எனவே தமிழ்நாட்டில் பாஜகவை நுழையவிடக் கூடாது. அதனால் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது.
தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே ஒரு உறுப்பினரும், பாஜக எம்பியாகவே உள்ளார்.