தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை - புதுக்கோட்டை ஆட்சியர்!

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

pudukkottai
pudukkottai

By

Published : Dec 11, 2019, 9:40 AM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதற்கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாணடார்கோவில், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல்கள் நடைபெறும்.

அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான எந்தவொரு அலுவலகங்களிலும், கட்டடங்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்துதல், இதர தேர்தல் பணிகள் மேற்கொள்ளுதல் கூடாது. தேர்தல் வேட்பாளரின் பெயர், கட்சியின் பெயர் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பரத் தட்டிகளோ, சுவரொட்டிகளோ பொது இடங்களில் வைக்க அனுமதி கிடையாது.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை தேர்தல் செலவினக் கணக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள படிவத்தில் பதிவிட்டு அதன் நகலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனுக்கள் 09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்படும். இதில் 14.12.2019, 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

தேர்தலுக்காக ஏழு பறக்கும்படை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 440 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணில் 04322-221691 தெரிவிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details