புதுக்கோட்டை: முத்துப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.ஆர் என்ற எஸ்.ராமச்சந்திரன். இவர் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரராகவும், ரியல் எஸ்டேட், கல் குவாரி, சோலார் பவர் பிளான்ட் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இது மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத் தலைவராகவும் உள்ளார். 2016 ஆம் ஆண்டு எஸ்.ராமச்சந்திரன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்து சோதனை மேற்கொண்டு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்து 2016 ஆம் ஆண்டு அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக, தற்சமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, புதுக்கோட்டையில் நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம், வடக்கு ராஜா வீதியில் உள்ள முருகபாலா ஆர்கிடெக்ட் அலுவலகம், அரியாணிபட்டியில் உள்ள ராமச்சந்திரன் பினாமி என சொல்லக்கூடிய சண்முகம் என்பவருக்கு சொந்தமான செம்மண் குவாரி போன்றவற்றிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் மலவராயன் பட்டியை சேர்ந்த ராமச்சந்திரனின் உறவினரான வீரப்பன், புதுக்கோட்டை ஏ.எம்.ஏ நகரை சேர்ந்த ராமச்சந்திரனின் தொழில் நண்பரான மணிவண்ணனுக்கு சொந்தமான வீடு மற்றும் புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ் நகரை சேர்ந்த ஆடிட்டர் முருகேசன் வீடு, திண்டுக்கல் ரத்தினம் உறவினரான கரிகாலனுக்கு சொந்தமான வீடு, அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீடு ஆகிய ஒன்பது இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தப்பட்டது.