புதுக்கோட்டை அருகே ஊராட்சி தலைவரை சிறைபிடித்த கிராம மக்கள் புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே பொதுப்பாதையை அடைத்து கழிப்பறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி விட்டு பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டியவாறு பின்புறமாக இருக்கும் வயல் மற்றும் தோட்டங்களுக்குச் செல்ல பொதுப்பாதையை பல ஆண்டுகளாக அக்கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் திடீரென அந்த பொதுப்பாதையை அடைத்து அதில் கற்களை கொட்டி வைத்து, அந்த இடத்தில் கழிப்பறை கட்ட இருப்பதாகவும், அதனால் இனிமேல் இந்த பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பன்னீர் செல்வத்தையும் ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்குமாரையும் அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு அலுவலகத்தின் வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாயாசம் ஏன்டா இப்படியிருக்கு..? போர்க்களமாக மாறிய கல்யாண வீடு..! - வைரலாகும் வீடியோ
மேலும் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றது முதல் எந்த ஒரு வசதிகளையும் செய்து கொடுத்ததில்லை என்றும், ஏதேனும் கோரிக்கைக்கு சென்றால் கூட மக்களை அலட்சியமாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதையை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று உறுதியளித்து சிறை வைக்கப்பட்டிருந்த பன்னீர் செல்வத்தை மீட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரான பன்னீர் செல்வம் (60) மீது பண மோசடி, கள்ள நோட்டு வழக்கு, இரட்டிப்பாக பணம் தருவது, குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவது உட்பட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதன் விளைவாக இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு.. தென்காசியில் பகீர் சம்பவம்!