புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தில் மின்சார கம்பி ஒன்றோடு ஒன்று உரசியதில், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தில் ஆதி திராவிட தெருவில் செந்தில்குமார் - இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது மூத்த மகன் ராம்குமார் செங்கிப்பட்டியை அடுத்த முத்தாண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் ராம்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று (அக்.30) நின்றுகொண்டிருந்த போது, காற்றின் வேகத்தினால், திடீரென மின்சார கம்பி அங்குள்ள மரத்தில் மோதி, ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து, நின்றுகொண்டிருந்த மாணவர் ராம்குமார் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இந்நிலையில் ராம்குமாரின் வீட்டருகே வசித்து வரும் சந்திரா என்ற 40 வயது பெண், வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு தண்ணிர் பிடிப்பதற்காக வந்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராம்குமாரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த போது, அவருக்கும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கி பலத்த காயங்களுடன் சந்திரா மீட்கப்பட்ட நிலையில், தூக்கி வீசப்பட்ட ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.