கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 20 நாட்களுக்கும் மேலாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள டிரம்செட் கலைக்குழுவினர், அரசு விழாக்கள், தனியார் விழாக்கள், இறப்பு போன்ற எவ்வித நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், வேலை இல்லாமல் மிகுந்த இன்னலில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதில், “புதுக்கோட்டை நகர் பகுதியில் டிரம்செட் கலைக்குழுவினர் சுமார் 25 குழுக்களுக்கு மேல் உள்ளனர். இதில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் வீதம் சுமார் 500 பேர் இருக்கின்றனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்ட டிரம்செட் கலைக்குழு உரிமையாளர்கள் நல சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர்.
மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த டிரம்செட் கலைஞர்கள் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தனி கவனம் செலுத்தி சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி இதில் தனிக்கவனம் செலுத்தி எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் எங்களுக்கு அரசினுடைய நலத்திட்டங்களை வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்செட் கலைக்குழு உரிமையாளர் நல சங்கத்தின் தலைவர் முருகன், “நாடக நடிகர் சங்கம், தெருக்கூத்து நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு தமிழக அரசு செய்கின்ற உதவி போல் எங்களுக்கும் இந்த உதவியை செய்யவேண்டும். வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் எங்களைப் போன்ற கலைக்குழு நடத்தக்கூடிய நபர்களுக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கருணை உள்ளத்தோடு உதவி செய்ய வேண்டும். ஆட்சியரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எங்களுடைய சிரமங்களை எடுத்துக்கூறவுள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:1,440 மது பாட்டில்களை உடைத்த காவல் துறை!