இது குறித்து அவர் தெரிவிக்கையில், "நாட்டில் கரோனா நோய்த் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய சித்த மருந்தான கபசுரக் குடிநீரை அருந்த வேண்டும் என்று மத்திய அரசின் ஆயுஸ் கூறியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் கபசுரக் குடிநீர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களும் பருகிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகம் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் அதன் உற்பத்தி யூனிட் இரண்டாவது பிரிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியுள்ளது.
இரண்டாவது யூனிட்டில் தற்போது கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் மருந்துப் பொடி தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
பருகுங்க உயிர்காக்கும் அருமருந்தை; விரட்டுங்க கரோனாவை கபசுரக் குடிநீர் மருந்துப் பொடியில் சுக்கு, கடுக்காய் தோல், ஆடா தொடை இலை, கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி இலை, அக்கரகாரம் திப்பிலி, கிராம்பு, முள்ளி வேர் உள்ளிட்ட 15 வகையான சித்த மருந்து வகைகள் சமச்சீரான அளவில் சேர்க்கப்பட்டு அவை அரவை மெஷினில் போடப்பட்டு பொடி செய்யப்படுகிறது.
இதேபோன்று நிலவேம்பு குடிநீர் மருந்து பொடியில் நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சந்தன சிராய், வெட்டிவேர், மிளகு, சுக்கு என ஒன்பது வகையான சித்த மருந்து வகைகள் சம அளவில் சேர்க்கப்பட்டு பொடி செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை இரண்டாவது யூனிட்டில் தினமும் 450 கிலோ கபசுரக் குடிநீர் மருந்துப் பொடி, 450 கிலோ நில வேம்பு குடிநீர் மருந்துப் பொடி ஆகியவை தயார்செய்யப்படுகிறது.
இங்கு தயார்செய்யப்படும் நில வேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகியவை தென் பகுதியிலுள்ள 19 மாவட்டங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுவருகின்றன.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீரை தினமும் பருக வேண்டும். அதனால் மட்டுமே கரோனாவை எதிர்கொள்வதற்குத் தேவையான எதிர்ப்புச் சக்தி நமக்கு கிடைக்கும்.
விரைவில் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தின் 19 வகையான மருந்து வகைகள் புதுக்கோட்டை யூனிட்டில் தயார்செய்யப்பட உள்ளது. அதற்கான உரிமம் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் புதுக்கோட்டை யூனிட்டில் உற்பத்தி தொடங்கும்" என்றார்.